இட்லி தோசை
மயக்கம் லேசாகத் தெளிந்தது. கண்களை இன்னும் திறக்கவில்லை. ஆனால் அம்மா, அப்பா, அண்ணன் அருகில் இருப்பது தெரிந்தது.
"தோசை வேணும்ப்பா"
"இங்க தோசையெல்லாம் கிடைக்காது குட்டி"
"வெங்கடேஸ்வரா சைவ உணவகம்ன்னு போட்டிருக்கே. அண்ணன் கூட ஒரு தோசை 3 சட்டினி சாப்பிட்டானே, எனக்கும் ஒரு தோசை வாங்கிக்கொடுப்பா"
வெங்கடேஸ்வரா... என போர்டு மங்கலாகத் தெரிவது போல் இருந்தது.
"வெங்கடேஸ்வரா சைவ உணவகம் இல்லைடா கண்ணு, மருத்துவமனை. நீ டாக்டரைக்கூடப் பார்த்தயே"
அறுவை சிகிச்சைக்காக மயக்க ஊசி கொடுப்பதற்காக காலையிலிருந்தே பட்டினி போட்டுவிட்டார்கள். அண்ணன் ஹோட்டலில் தோசை தின்றபோது பசியும் ஆசையுமாகப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
டாக்டர் மயக்க ஊசி போடும்போது என் கவனத்தை திசை திருப்ப 1, 2, 3 எண்ணச்சொன்னார். தோசை கிடைக்காத வெறுப்போடு இதுவும் நினைவுக்கு வந்தது.
"ஆமாம், என்னை இந்த டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்தீங்க பாரு, இவருக்கு சரியா ஒண்ணு ரெண்டு கூட எண்ணத்தெரியலை." அதற்குள் இன்னும் கொஞ்சம் தெளிய, வலி, ஊசி, மறுபடி மயக்கம்.
~*~
தாத்தா தெவசத்தின் போது காலையிலிருந்து பட்டினி கிடக்க வேண்டியிருப்பதால் அத்தை ரகசியமாக காசு கொடுத்து யாருக்கும் தெரியாமல் பாப்பாத்தி கடையில் போய் இட்டிலி வாங்கிச் சாப்பிடச்சொல்வாள். பாப்பாத்தி கடையில் சாப்பிடுவது மிகப்பெரிய குற்றம். அங்கே முட்டையெல்லாம் வைத்திருப்பாள். தோசை ஊற்றும் அதேகல்லில் முட்டையையும் உடைத்து ஊற்றுவதை நானே பார்த்திருக்கிறேன். பாப்பாத்தி கடையில் இட்லி தோசைகள் வீட்டில் செய்வது போல் இல்லாமல் வேறு ஒரு விதமான வாசனை, சுவையுடன் இருக்கும். எப்போதோ கிடைக்கும் திருட்டு சுகம்.
அப்பாவுடன் எப்போதாவது சாயங்கலவேளை சைக்கிளில் டவுன் வரை போய் வருவோம். அண்ணன் பின்னால் கேரியரில் உட்கார்வான். எனக்கு முன்பாக பாரில் ஒரு குட்டி சீட்டும், கீழே கம்பியில் ஒரு கால் பிடியும் இருக்கும். ஹோட்டலில் வடை, தோசை எதாவது சாப்பிடுவோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அப்பா "வீட்டில் சாப்பிடுவது போல் வராது" என்பார். எங்களால் ஒத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக ஹோட்டல் கடை சாம்பார் தூக்கலாக இருக்கும்.
பிற்பாடு அம்மா வேலைக்குப் போக ஆரம்பித்ததால் சில சமயம் சமையல் செய்ய நேரம் இருக்காது. அப்போதெல்லாம் சாதம் மட்டும் வடித்துவிட்டு காசினோ ஓட்டலில் ஒரு ரூபாய்க்கு சாம்பார் மட்டும் வாங்கி வரச்சொல்லுவாள். மாங்கய் சொம்பில் முக்கால் வாசிக்கு மேல் ஊற்றி ஒரு காகிதம் போட்டு மூடிக் கொடுப்பான். சிந்தாமல் தூக்கிவர வேண்டும். கை சுடும்.
பிற்பாடு காசினோ ஓட்டலை மூடிவிட்டார்கள். கீதா கபேவையும் இடித்து வேறு கடை கண்ணிகள் கட்டி விட்டார்கள். ஆரியபவன் பக்கத்தில் புதிதாக ஒரு ஓட்டல் வந்தபின் ஆரியபவனில் கூட வியாபாரம் படுத்துவிட்டது. புது ஓட்டலில் குஷ்பு இட்டிலி போட்டார்கள். தோசைக்குத் தொட்டுக்கொள்ள 7 வித சட்டினி கொடுத்தார்கள். ஓட்டல் பளிச்சென்று இருக்கும். சுவற்றில் பெரிய பெரிய சாமி படங்கள் மாட்டியிருக்கும். ஆரியபவன் தூங்கிவழிந்தது. என் மாமா போன்ற பழைய கட்டைகள் மட்டும் தொடர்ந்து வரும். நானும் எப்போதாவது ஊருக்குப் போனால் ஆரியபவனில் டிபன் சாப்பிடுவேன். அப்பா சொன்னது சரிதான், வீட்டு சாப்பாடு போல வராது.
~*~
காலையில் இட்லி சுட்டதும் பக்கத்தில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டுபோய் விற்று வருவேன். வீட்டில் பெரிய பெரிய பேங்க் ஆபீசர்கள் வாசலில் ஷூக்களைக் கழற்றிவிட்டு வந்து பாயில் காலை மடக்கி உட்கார்ந்து இட்லி சாப்பிடுவதைப் பார்த்தால் சிரிப்பாக வரும்.
கேஸ் அடுப்பு, நான்ஸ்டிக் தோசைக்கல், பிரஷர் குக்கரில் இட்லித்தட்டுகள், ரெட்மேட் மாவுப் பாக்கெட்கள் எல்லாம் வந்த பின் இட்லி-தோசையின் வாசனை, சுவைகள் மாறிவிட்டன.
என்ன இருந்தாலும் இட்லி தோசைன்னா நம்ம ஊர்தான் சார். இந்த ஊர் உடுப்பி ஹோட்டல் எல்லாம் நமக்குப் பிடிக்காது. சாம்பார்ன்னு எதோ சிவப்பு நிறத்தில் பருப்பில்லாமல் சர்க்கரை போட்டுக் கொண்டு வரான். ரவா இட்லியும் நமக்கு ஆகாது. கொழுக்கு மொழுக்குன்னு உளுந்து இட்லின்னாதான் பிடிக்கும். தோசை கூட ஒரு மாதிரி நிறைய எண்ணை ஊற்றி செய்யறாங்க. சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சினை வருது. ஜிண்ட்டாக் போட்டுக்க வேண்டியிருக்கு. ஏதோ ஹெல்த்தியா சாப்பிட்ட feelஏ இல்லை.
இதனாலோ என்னமோ வரவர இட்லி தோசைன்னாவே அவ்வளவா பிடிப்பதில்லை. சின்ன வயதில் ஆசை அசையாய்த் தேடித் தின்றவற்றை மனம் தேடுகிறது, நாக்குக்கு அந்த ருசி தெரியவில்லை.
~*~
ஆனந்த்
மே 5, 2009

0 comments:
Post a Comment